சிவசுப்பிரமணியன் குழு அறிக்கை
சிறுதாவூரில் தலித்களின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுக்கும் பங்களா, பரணி ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், இந்த நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் இயக்குனர்களாக உள்ளதும் தெரியவந்துள்ளது. தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆக்கிரமித்து அங்கு பங்களா கட்டியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் கூறின. இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தலித்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தின. ஆனால், தனக்கும், இந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியன் தலைமையில் குழுவை அமைத்தது தமிழக அரசு.
3 ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்தக் குழு கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் தந்த 40 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி சிவசுப்பிரமணியன் 813 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது சிறுதாவூரில் 1967-ம் ஆண்டில் ஏழை தலித் மக்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இதில் 53 ஏக்கர் நிலத்தையும், மேலும் அரசின் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தான் சித்ரா என்பவருக்குச் சொந்தமான பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் பங்களாவை கட்டியுள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதல்ல. அதே நேரத்தில் பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிலங்களை கைப்பற்ற தமிழக அரசின் நில நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment