tngea

Pages

Saturday, November 12, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
நன்றி தினகரன் சென்னை 12-11-11


சென்னை, நவ. 11: மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி இம்மாதம் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம். பழனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் என். செல்லபாண்டியன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.

"கிராம ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மக்கள் நலப் பணியாளர்களுக்கான பணியிடங்களை கடந்த 2.9.1989 அன்று அப்போதைய தி.மு.க. அரசு உருவாக்கியது. அதன்படி நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி 13.7.1991 அன்று அப்போதைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 24.2.1997 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் 1.6.2001 அன்று மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டுமொரு முறை பணியிலிருந்து நீக்கப்பட்டனர். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், 12.6.2006-ல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

இந் நிலையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி இம்மாதம் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் இருப்பதால், மக்கள் நலப் பணியாளர் என்ற பணியிடங்கள் தேவையற்றதாக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் உண்மையில்லை. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஏராளமானவை காலியாக உள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, இது அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதே உண்மையாகும்.

இந்த அரசாணை சட்ட விரோதமானதாகும். எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீது நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆர். வைகை, எல். சந்திரகுமார் ஆகியோர் ஆஜராகி, அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாக இல்லை என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மக்கள் நலப் பணியாளர்களின் பணிக் காலம் 31.5.2012 வரை என வரையறுக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

மனுதாரர்கள் சார்ந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள மக்கள் நலப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, அந்த சங்க உறுப்பினர்களின் பட்டியல் சனிக்கிழமை (நவ. 12) மாலை 4 மணிக்குள் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால், இந்த இடைக்காலத் தடையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment