தாற்காலிக ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
First Published : 27 May 2010 12:23:23 AM
சென்னை, மே 26: தாற்காலிக ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) சட்டம் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகத்தின் தரப்பில் ஊழியர்களுக்கான பி.எஃப். தொகை செலுத்தப்படவில்லை.
இதையடுத்து, 1986-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை பள்ளி நிர்வாகம் ஊழியர்களுக்காக செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு பள்ளி நிர்வாகம் ரூ.58 ஆயிரத்து 412 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் தரப்பில் பி.எஃப் தீர்ப்பாணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகத்திடம் ரூ.58 ஆயிரம் வசூலிக்கும் நடவடிக்கை சரியே என்று தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு விவரம்:
"எங்கள் பள்ளியில் 20 ஊழியர்களுக்கும் அதிகமாக பணியாற்றுவதாக பி.எஃப் மண்டல ஆணையரகம் கூறுவது தவறு. ஒரு சில நேரங்களில் மட்டுமே 20-க்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்துள்ளனர். பள்ளியில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் தாற்காலிகமாக மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, எங்கள் பள்ளிக்கு வருங்கால வைப்பு நிதி சட்டம் பொருந்தாது. பி.எஃப். ஆணையரகத்தின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
"தங்களிடம் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றியுள்ளதாக பள்ளி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி ஊழியர்கள் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே நிர்வாகம் பி.எஃப். தொகை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வருங்கால வைப்பு நிதிச் சட்டம் தாற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். எனவே, பள்ளி நிர்வாகத்துக்கு வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க முடியாது' என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment