நியாயம்தானா எம்.பி.க்களே?
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010( 13:46 IST )
அதற்குப் பதிலாகவே தங்களுடைய அலுவலக பராமரிப்பு, தொகுதிப் படி ஆகியவற்றிற்கு மேலும் தலா ரூ.5,000 அளிப்பது என்று இன்று பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஊதிய உயர்வு அளிப்பது என்பது நமது நாட்டில் புதிது ஒன்றும் அல்ல, அது கிட்டத்தட்ட ஆண்டாண்டு நிகழ்வுதான். ஆனால் அப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும்போதெல்லாம் அதற்கான அடிப்படை என்ன என்பதை அரசு தெரிவிக்கும். விலைவாசி ஏற்றத்தால் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பஞ்சப் படியை உயர்த்துவது, சில ஆண்டுகளில் சேர்ந்துள்ள பஞ்சப் படியை, விலைவாசி குறையாத காரணத்தினால் (என்றைக்கு இந்தியாவில் ஏறிய விலை குறைந்துள்ளது?), அதனை அடிப்படை ஊதியத்தில் சேர்த்துவிடுவது என்றும், 4வது ஊதிய ஆணையம், 5வது ஊதிய ஆணையம் என்று - ஊதியத்தை உயர்த்தி அதன் மூலம் அரசு ஊழியர்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொளவதற்கென்றே அமைக்கப்படும் ஆணையங்கள் அளித்த பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்படும். நமது நாட்டிற்காக கடுமையாக உழைத்திடும் அரசு ஊழியர்களும் அதனைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைவர்.
ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான நியாயம் என்ன? நமது நாட்டின் பெரும்பான்மை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஊதியத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்களா? நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அப்படி வாழ்ந்துவரும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 அல்லது 30ஐத் தாண்டாது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அவர்களுக்கு இந்த 16 ஆயிரம், 50 ஆயிரம் என்பெதல்லாம் ஒன்றுமில்லாத பணம் என்பது தெரியவரும்.
கோடிகள் கொடுத்து பெற்ற வெற்றியல்லவா?
எத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்று வந்துள்ளார்கள் இவர்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், வாக்காளர்களை மகிழ்விக்க எத்தனை கோடிகளை அள்ளி வீசினார்கள் என்பது மக்களுக்கே (அவர்கள்தானே வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள்) தெரியுமே! ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், தோற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், பெரம்பலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் வீட்டுக்கு வீடு எவ்வளவு அளித்தார், இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் தனது தொகுதியை மட்டுமே பார்த்துக் கொள்ளாமல், பக்கத்து தொகுதியையும் எவ்வாறு கண்டுகொண்டார்,
இன்றைக்கு மத்திய அரசில் அதிகாரமிக்கவராக இருந்து இந்த நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்டிருப்பவர் எவ்வளவு செலவு செய்து குறைந்த வாக்குகளில் முதலில் தோற்று, பிறகு வெற்றி பெற்றார் என்பதெல்லாம் நாடறிந்த இரகசியம் ஆயிற்றே! வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூட ‘போதுமான அளவிற்கு’ செலவு செய்த காரணத்தினால்தான் வெற்றி பெற்றார்கள் என்றெல்லாம் பரவலாகப் பேசப்பட்டதே. கட்சி பலத்தையும், மக்கள் ஆதரவையும் மட்டுமே முழுமையாக நம்பி இந்த நாட்டில் எத்தனை வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்? எனவே, ஏதோ எழுத்தர் பணி அரசு ஊழியர்கள் போல இவர்கள் ஊதிய உயர்வு கேட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியது நம்பமுடியாத வேடிக்கையாகவே இருந்தது.
வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்து வெற்றி பெற்று வந்தார்கள் என்பதல்ல, அவர்களுக்கு அளிக்கும் ஊதியம் நீண்டகாலமாக மாற்றியமைக்கப்படவில்லை (அதாவது உயர்த்தப்படவில்லை) என்று நியாயம் தேடலாம். ஆனால் இவர்கள் ஊதியம் மட்டுமா பெறுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் பெறும் மாத ஊதியம் மட்டுமின்றி, அவர்களுக்கு தங்கள் அலுவலகத்தை நடத்திக் கொள்ள படி, நாடாளுமன்ற நிகழ்வில் கலந்து கொள்ள டெல்லி வருவதற்கு அவருக்கும், அவருடைய உதவியாளருக்கும் (அல்லது மனைவியுடன்) இலவச விமான பயணம் (வருடத்திற்கு 40 விமான பயணங்கள் இலவசம்), தொகுதியில் சென்று ‘பணி’யாற்ற படி, ஒரு நாள் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றால் அதற்கு ரூ.1,000 படி (இப்போது ரூ.2,000 ஆக உயர்வு), டெல்லியில் தங்க மிக வசதியான தங்குமிட வசதி (இதற்காக அவர் கொடுக்கும் மாத வாடகை ரூ.2,000 மட்டுமே), தனது மனைவி அல்லது உறவினருடன் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் முதல் வகுப்பு இரயில் பயணம் இலவசம், ஆண்டிற்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம், உள்ளூர் போக்குவரத்துப் படி (கி.மீ.க்கு ரூ.8.00), உணவு, 1,70,000 இலவச தொலைபேசி என்று அனைத்திற்கும் படி, படி என்று கை நிறைய படியாக பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு மேலும் ரூ.16,000 போதவில்லை என்றால்... ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.வறுமைக் கோட்டிற்குக் கீழ் 37% இந்தியர்கள்இந்த நாட்டில் ரூ.16,000 ஒரு குடும்பம் பிழைப்பதற்குப் போதுமானதல்ல என்றல்லவா பொருள்? மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அரசு அமைத்த டெண்டுல்கர் குழு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு வேளை உணவிற்கு திண்டாடுபவர்கள்! ஆனால் அர்ஜுன் சென்குப்தா குழு 77 விழுக்காடு மக்கள் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் குறைவான வருவாய் கொண்டே உயிர் வாழ்கிறார்கள் என்கிறது. என்.சி. சக்சேனா குழு நமது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள் என்கிறது. டெண்டுல்கர் குழு அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனையே அடிப்படையாகக் கொள்வோம். மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமான மக்கள் நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட மக்கள் (வாக்காளர்கள்) நமது நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வருவாய் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவு! அதுவும் நிரந்தரமல்ல. அதனால்தானே தேசிய உணவிற்கு வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது? மழை, வெள்ளம் அனைத்தினாலும் பாதிப்பு. ஆனால் இவர்கள் (தவறாமல்) அளித்த வாக்குகளைப் பெற்றுத்தான் இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏன்? தங்களின் வாழ் நிலையை வறுமையில் இருந்து தேற்றி, ஒரு கண்ணியமிக்க வாழ்வைப் பெறுவதற்காக. ஆனால், இவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தேடுத்தனுப்பிய அவர்களின் வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல், தங்களின் வசதியை அரசு செலவில் பெருக்கிக்கொள்ளத்தான் இந்தப் பாடு படுகிறார்கள். மக்கள் வலி அறிந்தவர்கள்இதற்கு முன்னிருந்த நாடாளுமன்றவாதிகள் பலர் ஒருபோதும் தங்களுடைய ஊதியத்தை அதிகரித்துக் கொடு என்று கேட்டதில்லை. ஒரு நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ரூ.350இல் இருந்து ரூ.400க்கு உயர்த்தப்பட்டபோது கேரளத்தைச் சேர்ந்த பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ஏ.கே.கோபாலன், நமது நாடு உள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படும் நமது ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுக்கக் கூடாது என்றார் என்கிறது நாடாளுமன்ற வரலாறு. அவர்களெல்லாம் அவ்வாறு கூறக் காரணம், அவர்கள் மக்களின் வலியை அறிந்திருந்தார்கள், இப்போது உள்ளவர்களுக்கு அந்த வலியும் தெரிவதில்லை, அது குறித்தும் (சில உறுப்பினர்களைத் தவிர) எவரும் விவாதிப்பதுமில்லை. ஆண்டொன்றுக்கு ரூ.12 இலட்சத்திற்கு நிதி நிலை அறிக்கை போடும் ஒரு நாட்டின் அரசு, தனது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதால் ஏற்படும் செலவினால் ஒன்றும் மூழ்கிவிடப் போவதில்லை. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒரு பெரும் பிரிவினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல், ஊதிய உயர்வு கேட்பது நியாயமுமல்ல, ஜனநாயகமுமல்ல.
«
No comments:
Post a Comment