சுரங்கங்களை தேசியமயமாக்குக! நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்
புதுதில்லி, ஆக. 21-
நாட்டின் வளங்கள் கொள்ளை போவ தைத் தடுத்திட, சுரங்கங்கள் அனைத் தையும் தேசியமயமாக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறி னார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளியன்று நாட்டில் பெரிய அளவில் சட்டவிரோதமான முறையில் சுரங்கங்க ளிலிருந்து கனிம வளங்கள் கொள்ளை போவது தொடர்பாக குறுகிய கால விவா தம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-
நாம் சுதந்திரக் குடியரசாக மாறி அறுபதாண்டுகளான பின்னர், இது போன்று நாட்டின் கனிம வளங்கள் கொள்ளை போவது குறித்த விவாதத்தில் கனத்த இதயத்தோடு பங்கேற்கிறேன்.
நாம் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகையில் என்ன சொல்லியிருக்கிறோம். இந்திய மக்களா கிய நாம், நாட்டின் கண்ணியத்தை மட்டு மல்ல, ஒவ்வொரு குடிமகனின் கண்ணி யத்தையும் காப்போம் என்று நமக்கு நாமே உறுதி எடுத்துக் கொண்டிருக்கி றோம். ஆனால், நாட்டின் பல பகுதிக ளிலும் மிகப் பெரிய அளவில் நம் கனிம வளங்கள் சட்டவிரோதமானமுறையில் கொள்ளை போவதைப் பார்க்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட கனிம வளம் குறித்த சங்கதி மட்டுமல்ல. இரும்புத் தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டி ருக்கிறபோதிலும், நாட்டின் அனைத்து விதமான கனிம வளங்களும் இவ்வாறு கொள்ளைபோய்க்கொண்டுதான் இருக் கின்றன.
நம் அவையிலேயே ஒரு கேள்விக் குப் பதிலளிக்கையில் மத்திய அமைச்சர் ஹாண்டிக், கடந்த ஆண்டில் மட்டும் பதினோரு மாநிலங்களில் 42 ஆயிரம் வழக்குகள் சட்டவிரோத சுரங்கக் கொள்ளை தொடர்பாகப் பதிவு செய்யப் பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளைபோவது தொடர்பாக வழக் குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சட்டவிரோத நடவடிக்கைகள் என்பது அப்படி ஒன்றும் மிகச்சிறிய அளவில் நடைபெறவில்லை. நாட்டின் வளங்கள் அரக்கத்தனமான முறையில் கொள் ளையடிக் கப்பட்டுக்கொண்டிருக்கின் றன. நாடு குடியரசாகி அறுபதாண்டுகள் ஆகியபின்னரும் இத்தகைய கொள் ளையை நாம் அனுமதிக்கப் போகி றோமா? நாட்டின் கனிம வளங்களைப் பாதுகாத்திட, கொள்ளை போவதைத் தடுத்திட அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது தெளிவாக் கப்பட வேண்டும்.
இது தொடர்பாக வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி எல்லாம் நடவடிக்கை கள் மேற்கொண்டிருக்கின்றன என்று நாம் ஆராய வேண்டும்.
அமெரிக்கா என்ன செய்கிறது? அது தன்னிடம் உள்ள எண்ணெய் இருப்பில் கை வைக்கவில்லை. அதனை எதிர் கால அவசரத் தேவைகளுக்காக, அப்ப டியே விட்டு வைத்திருக்கிறது. தற்போ தைய தேவைக்கு வெளிநாடுகளிலி ருந்து இறக்குமதி செய்து கொண்டி ருக்கிறது. நம் அண்டை நாடான சீனத் தைப் பாருங்கள். தனக்குத் தேவையான பல்வேறு கனிமங்களை அது உலகின் பல பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. தன்னிடம் உள்ள கனிம வளங்களை எதிர்காலத் தேவைக் காக பேணிப் பாதுகாத்து வருகிறது. ஆனால் நம் நாட்டின் நிலை என்ன?
நம் கனிம வளங்கள் அனைத்தும் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி கொள் ளையடிக்கப்பட்டு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுக் கொண் டிருக்கின்றன. இதுதான் பொருளாதார நூல்களில் ‘சட்டவிரோத முதலாளித் துவம்’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம் பிரதமர் என்ன கூறு கிறார்? நம் பிரதமர் ஒரு சமயம், `இந்தியா வில் சட்டவிரோத முதலாளித்துவம் அதிகரித்து விட்டது’ என்று கூறினார். பிரதமர், தான் கூறியதில் உறுதியாக நிற் கிறார் என்றால், இவ்வாறு கொள்ளை போவதற்கு எதிராக உறுதியான நடவடிக் கைகளை அரசு எடுத்திட வேண்டும். நாட்டின் அனைத்துக் கனிமவளங்க ளையும் தேசியமயமாக்கிட வேண்டும், அனைத்து கனிம வளங்களையும் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்திட தடை விதித்திட வேண்டும். எவரேனும் நம் கனிமவளங்களைப் பயன்படுத்திட விரும்பினால், அவர்கள் நம் நாட்டிற்கு வந்து தொழிற்சாலைகளை நிறுவட்டும். நம் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை அளிக்கட்டும். நாட்டின் உற் பத்தி வளங்களையும் பெருக்கிக் காட்டட் டும். அதன் மூலம் நாம் ஆதாயம் அடைந் திட முடியும். இப்போதுள்ளது போல் நம் செலவில் அயல்நாட்டினர் தங்கள் உற் பத்திக் கொள்ளளவை அதிகரித்துக் கொள்ள முடியாது.
நாம் பிற நாடுகளிடமிருந்து இதில் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நாட்டின் அனைத்துக் கனிம வளங்க ளையும் தேசியமயமாக்கிட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. நம் முடைய கனிம வளங்கள் எவ்விதத்தி லும் ஏற்றுமதி செய்ய தடை விதித்திட வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்ப தால் தான் இத்தகைய கொள்ளை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்கிற முறையில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இவ்வாறு கனிமங்கள் கொள்ளை போவ தைத் தடுத்திட இயலாமல் பழியை மத் திய அரசு, மாநில அரசுகள் மீது போடு வது சரியல்ல. இதற்கு ஒரே வழி, நாட் டின் அனைத்துக் கனிம வளங்களையும் தேசியமயமாக்குவதுதான்.
பெல்லாரி கொள்ளை
பெல்லாரியில் நடந்த கொள்ளை விவரங்கள் என்ன? கர்நாடக முதல்வர் மாநில சட்டமன்றத்தில் பல்வேறு கேள் விகளுக்கு அளித்த பதில்களிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக 30 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவில் இரும்புத்தாது அங்கேயிருந்து வெளிநாடு களுக்குக் கொள்ளைபோயிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாநி லத்திலிருந்து மட்டும் இந்த அளவுக்குக் கொள்ளை போயிருக்கிறது. சர்வதேச சந் தையில் ஒரு டன் இரும்புத்தாது குறைந்தபட்சம் 50 அமெரிக்க டாலர் என்று விலை வைத்தோமானாலும்கூட, இதுவரை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 7,500 கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக மாநிலத்தில் ஒபுலா புரம் சுரங்கம் இருக்கும் இடத்திலிருந்து மட்டும் கொள்ளை போயிருக்கிறது.
இவ்வாறு கொள்ளைபோவதை அனு மதிப்பது என்பது, பாஜக ஆட்சியில் மட் டுமல்ல, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், குடியரசுத் தலைவர் ஆட்சி களின்போதும் நடைபெற்றிருக்கிறது.
மீண்டும் முதலமைச்சரின் அறிக் கைக்கு வருகிறேன். 2003-04ஆம் ஆண்டில் 20 லட்சத்து 49 ஆயிரத்து 961 டன்கள் இரும்புத் தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2004-05இல் இது 52 லட்சத்து 39 ஆயிரத்து 528 டன்களாகவும், 2005-06ஆம் ஆண் டில் இது 21 லட்சத்து 71 ஆயிரத்து 492 டன்களாகவும், 2006-07இல் இது 47 லட்சத்து 44 ஆயிரத்து 645 டன்க ளாகவும், 2007-08இல் 57 லட்சத்து 61 ஆயிரத்து 048 டன்களாகவும், 2008-09 இல் 33 லட்சத்து 96 ஆயிரம் டன் களாகவும், 2009-10இல் 71 லட்சத்து 27 ஆயிரத்து 937 டன்களாகவும் இருந்தி ருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைய தினம் சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஒரு டன் 150 அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி யாயின், சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளை போயிருக் கிறது.
இக்கொள்ளை சம்பவங்கள் தொடர் பாக தற்சமயம் பல்வேறு குழுக்கள் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றன. நீதிமன்றமும் இதில் தலையிட்டிருக் கிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுரங்கங்கள் தொடர்பாக, குறிப்பாக ஆந்திராவில் உள்ள ஒபுலாபுரம் சுரங்கம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்திடுமாறு கூறி அதிகாரமளிக் கப்பட்ட மத்திய அமைச்சரவைக் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. ஆய்வு செய்த அக்குழு ஆந்திரப் பிரதேச தலை மைச் செயலருக்கு சுரங்கப் பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்று அறிவு றுத்தி இருக்கிறது. ஆனால் அரசுத் தரப்பில் எதுவும் நடக்கவில்லை. இவ் வாறு அக்குழு 2009 நவம்பரிலேயே அறி வுறுத்தியது. அதன்பின்னர் சுமார் 71 லட்சம் டன்கள் சட்டவிரோதமாக ஏற்று மதி செய்யப்பட்டிருக்கின்றன.
இதேபோன்று கர்நாடகா லோக் அயுக்தா அறிக்கையை பார்க்கும் போது அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியாக இருக் கிறது. லோக் அயுக்தா தலைவர் தன் அதிகாரிகள் மூலம் ரெய்டுகள் நடத்தி சட்டவிரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்த 99 டிரக்குகளைக் கைப்பற்றியிருக்கின்றனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 8.5 டன்கள் இரும்புத்தாது ஏற்கனவே 11 கம்பெனிகளால் ஏற்றுமதிக்காக வாங்கப் பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் பரி சீலனை செய்துகொண்டிருக்கக் கூடிய சமயத்திலேயே, ஆறு லட்சம் டன்கள் இரும்புத்தாது ஏற்றுமதிக்காக கப்பல் களில் ஏற்றப்பட்டுவிட்டன. உயர்நீதி மன்றம் ஏற்றுமதியை நிறுத்து என்று கட்டளையிடுகிறது. ஆயினும் சுமார் 6 லட்சம் டன் இரும்புத்தாது காணாமல் போய்விட்டது. அரசின் கண் முன்னா லேயே, உயர்நீதிமன்றத்தின் கண்முன் னாலேயே, அதிகாரிகளின் கண்முன் னாலேயே இவ்வாறு 6 லட்சம் டன்கள் இரும்புத் தாது காணாமல் போகிறது. இதன்பின் முதல்வர் இதனை நான் நம்ப முடியாது என்று அறிக்கை விடுகிறார். பின்னர் அவர் அவை அனைத்தும் மழை நீரில் கரைந்துவிட்டதாகக் கூறியிருக் கிறார். (குறுக்கீடு) நான் பத்திரிகைகளில் வந்ததைத்தான் சொல்கிறேன்.
இவ்வாறு நம் நாட்டின் வளங்கள் கொள்ளைபோய்க்கொண்டிருக்கின்றன. இதனை நாம் தொடர்ந்து அனுமதிக்கப் போகிறோமா? நாட்டின் கனிம வளங்கள் முதல்வர் கூறுவதுபோல் ‘‘மழைநீரில் அடித்துச் செல்லப்படுகிறது’’. இது நம் செல்வம். இதனை எப்படி ‘மழைநீரில் கரைய’ அனுமதிக்க முடியும்?ஏன் அவ்வாறு கரைகிறது? நாம் அனைவரும் இதனை ஆழமாகப் பரிசீலித்திட வேண்டும்.
இவ்வாறு கொள்ளை போவதற்கு யார் காரணம்? இதற்கு உடந்தையாயி ருப்பவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இந்த அவை என்ன பரிந்துரைக்கிறதோ அதனை நிறை வேற்ற அரசு முன்வர வேண்டும். மத்திய - மாநில அரசுகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திடக் கூடாது, அனை வருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். (ந.நி.)
No comments:
Post a Comment