போராட்டமா; யாரங்கே?
-
தமிழகத்தில் இன்றைக்கு ஏறத்தாழ ரூ. 1லட்சம் கோடி புரளும் தொழிலாக- மாநிலத்தின் மொத்த வருவாயில் 25 சத வருவாயை- ரூ.13,500 கோடியை- அளிக்கும் தொழிலாக- ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் பணியாற்றும் ஒரு தொழிலாக மிகக் குறுகிய காலத்தில் மது விற்பனைத் தொழிலை ‘வளர்த்தெடுத்திருக்கிறது’ தமிழக அரசு.இந்நிலையில், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒரு முதலாளியாக உரிய ஊதியத்தையும் அவர்களுக்குரிய பணி உரிமைகளையும் அரசு அளிக்க வேண்டியது தொழில் தர்மமாகும்.தமிழக அரசு தான் நடத்தும் மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இப்போது ஊதியமாக- மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,000; விற்பனையாளர்களுக்கு ரூ.2,800; உதவியாளர்களுக்கு ரூ.2,100 வழங்குகிறது. இந்த ஊதியத்திற்கு 12 மணி நேரம் அவர்கள் பணியாற்ற வேண்டும்.நியாயமற்ற இந்த ஊதிய விகிதத்தையும் பணி நேரத்தையும் பணியாளர்கள் எதிர்க்கின்றனர். இந்தக் குறைவான ஊதியமும் உயர் அதிகாரிகளுக்கு ‘கப்பம் கட்டுதல்’ உள்ளிட்ட எழுதப்படாத நடைமுறைகளும் ஊழலுக்கு வழிவகுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் தொழிலை முறைகேடாக நடத்தும் நிர்ப்பந்தத்தை அரசே மறைமுகமாக உருவாக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அரசு இந்தப் போராட்டத்தை விரும்பாத பட்சத்தில் பணியாளர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். பணி நிரந்தரம் போன்ற அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கமுடியாத பட்சத்தில், பணிப்பாதுகாப்பு அளிக்கக்கூடிய மாற்று ஏற்பாடுகளை முன்வைத்திருக்கலாம். இதுதான் அரச நீதிக்கு இலக்கணம்.இந்தப்போராட்ட அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களிலேயே, ‘மதுக்கடைப் பணியாளர்கள் பிரச்சனைக்கும் மதுவிலக்கு பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்’ என்று பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தார்முதல்வர் கருணாநிதி. இதையடுத்து, பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர். தொடர்ந்து “போராட்டத்தில் ஈடுபடுவோர் பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிதாக ஆளெடுக்கப்படுவர்” என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் மூலமாகவும் மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறகு, “போராட்ட நாளில் ஒவ்வொரு மதுக்கடையும் காவல்துறையால் முழுமையாகக் கண்காணிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக, “போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு, கடைச்சாவியையும் பணியாளர்களிட மிருந்து பறித்திருக்கிறது அரசு.அநீதியானது. அறம் சாராத ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பதாலேயே அறநெறிகளை புறக்கணித்துவிட்டு அரசு செயல்படலாமா என்கிற கேள்வி எழுகிறது.இந்தப் பிரச்சனையில் மட்டுமல்ல; எந்தப் பிரச்சனையை முன்னிறுத்திப் போராடுபவர்களையும் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் எதிர்கொள்வதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதைவிட உண்மை.நன்றி: தினமணி (11.8.2010)
No comments:
Post a Comment