வேலைவாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை
-க.ராஜ்குமார்-
இந்த ஆணை தேவைதானா?
இந்த ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை குறித்து அரசு விளக்கமளிக்கையில், தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட காலஅவகாசம் தேவைப்படுவதால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது சரியா? சரி என்றால் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை மட்டும்தானே தற்காலிகமாக நிரப்பிட வேண்டும். ஆனால் அரசு பிறப்பித்துள்ள ஆணையில் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது வகித்து வந்த பதவியைக்காட்டிலும் உயர் பதவியில் அவரை நியமிக்கக் கூடாது எனவும், ஆனால் அவர் வகித்த பதவியைக் காட்டிலும் கீழ் பதவியில் பணியில் நியமிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் பதவி உயர்வு அளிக்க வேண்டிய பணியிலும் கூட ஓய்வு பெற்றவர்களை நியமிக்க முடியும் என்பதுதானே உண்மை. இதனால் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்படும் அல்லவா. தகுதி வாய்ந்த அரசு ஊழியர்கள் இருக்கின்றபோது அத்தகைய பணியிடங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு தயங்குவது ஏன். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பட்டியலுக்கு காலியிடங்களை நிர்ணயம் செய்திட அரசு நிபந்தனை விதித்திருந்ததால்தானே தற்போது தகுதியுள்ளவர்கள் இருந்தும் உயர் பதவிகளை நிரப்ப இயலவில்லை.
காலிப் பணியிடங்களை நிரப்பிட உள்ள அரசு விதிமுறைகள்
இத்தகைய சூழ்நிலைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி நிர்வாகத்தை மேற் கொள்ள ஏற்கெனவே அரசு பணி விதிமுறைகள் உள்ளன. தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட தாமதம் ஆனால் விதி 10 (ஏ) (1)ஐ பயன்படுத்தி நியமன அலுவலர்கள் வேலை வாய்ப்பகத்தின் மூலம் முறையான காலமுறை ஊதியத்தின் அடிப்ப டையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட முடியும். அந்த விதி தற்போது ஏன் முடக்கப் பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு பட்டியல் போட தாமதம் ஆனால் விதி 39 (ஏ) பிரிவு களை பயன்படுத்தி தற்காலிக பதவி உயர்வு கொடுக்க முடியும். கடந்த காலங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. இதை இப்போது மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது.
காலிப்பணியிடங்கள் கலைப்பு
சற்று கவனமாக பரிசீலித்தால் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறை அரசுப்பணியின் அடிப் படை கட்டமைப்பையே சிதைத்துவிட்டதை உணரமுடியும். தமிழ்நாட்டில் கடந்த 2001ல் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுப் பணிக்கு நியமனம் செய்வதை தடை விதித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்றன. இறுதியில் கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் இறுதிக்காலத் தில் அந்த தடையை முற்றிலும் நீக்கிவிட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப்பணி யிடங்களை நிரப்புவோம் என வாக்குறுதி தந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள் விதித்தனர். தேவையின் அடிப்படையில் அரசால் ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெறுவதின் மூலமோ, பதவி உயர்வில் சென்றுவிடுவதின் மூலமோ, அரசு ஊழியர்கள் இறந்து விடுவதின் மூலமோ ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நியமன அலுவலர்கள் மீண்டும் அரசின் அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டி அதை ஆய்வு செய்து கணிசமான பணியிடங்களை குறைத்து ஆணையிடும். இப்படி பல்வேறு துறைகளில் இந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசியல்சட்டம் மீறப்படுகிறதா??
இந்திய குடியரசின் அரசியல் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டம் இயற்ற அரசியல் தலைவர்களுக்கு எப்படி அதிகாரம் கொடுத்துள்ளதோ, அதே போல் அந்த சட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்திட அரசு ஊழியர்களுக்கும் அதி காரம் கொடுத்துள்ளது. இதனால் தான் அரசுப் பணிக்கு ஆள் எடுக்கும் தனி அமைப்பாக அரசியல் சட்டம் தேர்வாணையங்களை உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் போன்று சுயாட்சி அதிகாரத்தை கொண்ட அமைப்புதான் தேர்வாணையங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற மத்திய-மாநில தேர்வாணைய தலைவர்கள் மாநாட்டில், அரசுப்பணிக்கு பின்புற வழியாக பணி நியமனம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது எனவும், இத்தகைய நியமனங்களை தேர்வாணையங்கள் அங்கீகரிக்கக் கூடாது எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய நியமனங் களுக்கு எதிராக பல்வேறு தீர்ப்புகள் பகரப்பட்டுள்ளன. எனினும் மத்திய-மாநில அரசுகள் இவைகளை கண்டுகொள்வதில்லை. இன்று தமிழக அரசில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற் பட்ட அலுவலர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இத்தகைய அரசின் நடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு மாற்று வழியில் திசை திரும்புகின்றன. அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசுப் பணிகளில் முறையான பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு முன் வரவேண்டும். தற்போது அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர்களை நியம னம் செய்ய வழிவகுக்கும் ஆணையை ரத்து செய்ய முன்வர வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் 3000 உள்பட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுவே அரசின் இன்றைய உடனடி பணி ஆகும்.
கட்டுரையாளர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment