tngea

Pages

Sunday, June 6, 2010

உயிரை கொள்ளும் குளிர்பானம் - திடுக்கிடும் தகவல்


குரோமியம் என்ற நச்சை உற்பத்தி செய்யும் குளிர்பான தயாரிப்புத் தொழிற்சாலைகள்
சனி, 5 ஜூன் 2010( 14:57 IST )

நாம் தினமும் கோலா, அல்லது பெப்ஸி வகை பானங்களை அருந்தலாம், ஆனால் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் நீரிலும், மண்ணிலும் குரோமியம் என்ற நச்சுப் பொருள் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இந்த ஆய்வை நச்சு இடர்பாட்டு மையம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.வட இந்தியாவில் உள்ள பெப்சி, மற்றும் கோலா நிறுவனங்களின் 5 தொழிற்சாலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றில் குரோமியம் உள்ளிட்ட பிற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள அரசு ஏற்கனவே இதே காரணத்திற்காக கோலா நிறுவனம் ரூ.216 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பிளாச்சிமடாவில் உள்ள தொழிற்சாலை அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரையும், மண்ணையும் நச்சு மயமாக ஆக்கியுள்ளது என்று கேரள அரசு இந்த பன்னாட்டு நிறுவனம் மீது குற்றம் சாற்றியிருந்தது. தற்போது உத்திரப்பிரதேசத்தில் உள்ள மேதிகஞ்ச், காசியாபாத், ராஜஸ்தானில் உள்ள கலாதேரா, சோபன்கி, ஹரியானாவில் உள்ள பானிபட் ஆகிய இடங்களில் உள்ள குளிர்பான உற்பத்தி தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரில் நச்சு பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.காசியாபாதில் உள்ள விவசாயி ஒருவர் இது பற்றி குறிப்பிடுகையில், "எங்கள் நீர்நிலைகள் நச்சு மயமாகியுள்ளது. மேலும் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது." என்றார்.மேலும் குரோமியம் நச்சுக் கலப்பால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் தொகையில் சில பகுதியினருக்கு சரும வியாதிகளும், வயிற்று வலி உள்ளிட்ட பிற அடையாளம் காண முடியாத உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.எனவே கிராமத்தினர் முதற்கட்ட நடவடிக்கையாக பொது நல வழக்கு ஒன்றைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நீர் மாதிரிகள் 85-இல் 59 மாதிரிகளில் குரோமியம் நச்சுப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நச்சு ஆய்வு மைய‌ம் தெரிவித்துள்ளது.குரோமியம், சரும நோயையும், வயிற்று உபாதைகளையும், அல்சர் மற்றும் புற்று நோயை ஏற்படுத்துவதாக நச்சு ஆய்வு மையத்தின் இயக்குனர் தனு ராய் தெரிவித்தார்.காசியாபாத் பகுதியிலிருந்து திரட்டப்பட்ட மாதிரியில் காட்மியம், மற்றும் காரீயம் ஆகிய நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தொழிற்சாலைக் கழிவு பாயும் இடங்களில் உள்ள நீர் மாதிரிகளில் இந்த நச்சுப் பொருட்களின் அளவு பெருமளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குளிர்பான உற்பத்திகளில் கடினமான உலோகங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த தொழிற்சாலைகளுக்கு எந்த வித வழிகாட்டுதலும் இல்லை.ஆனால் தொழிற்சாலைக் கழிவு நீரில் தற்போது ஆய்வு செய்யப்பட்ட 3 கடின உலோகங்கள் தவிர வேறு சிலவும் கலந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்த அறிக்கைகளை மறுத்துள்ள கோலா நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பெப்சி நிறுவனம் எந்த விதக் கருத்தையும் கூற மறுத்துள்ளது.

No comments:

Post a Comment