போபால் விஷ வாயு கசிவு: குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு மட்டுமே சிறை
போபால் , திங்கள், 7 ஜூன் 2010( 16:52 IST )
போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு கசிந்தது.இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாற்றப்பட்டது. இவர்களில் யூனியன் கார்பைடு நிறுவன துணை மேலாளர் ராய் செளத்ரி என்பவர் இறந்து விட்டார்.அரசு சாட்சிகள் 178 பேரிடமும், எதிர்த்தரப்பு சாட்சிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.இந்நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில், 8 பேரையும் குற்றவாளிகள் என போபால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மோகன் பி. திவாரி இன்று தீர்ப்பளித்தார்.அதே சமயம் தண்டனை தீர்ப்பை பின்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதி தனது முடிவை மாற்றிக்கொண்டு இன்றே தண்டனை தீர்ப்பையும் அளித்தார். அதன்படி குற்றவாளிகள் 8 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், தலா 1 லட்சம் அபராதம் விதிப்பதாக அறிவித்தார் நீதிபதி.விபத்துக்கு காரணமான கார்பைடு நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தண்டனை விதிக்கப்பட்ட 8 பேருமே தலா ரூ.25 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.ஏற்கனவை குறைந்த அளவு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்துடன் கூறிக்கொண்டிருக்கும்போதே, தண்டனை பெற்றவர்கள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டது அவர்களை மேலும் அதிர்ச்சிக்கும், ஆவேசத்திற்கும் உள்ளாக்கியது. இந்த தீர்ப்புக்காகவா இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் என்று வேதனை தெரிவித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்குமாறு முழக்கமிட்டனர். மேலும் நீதிமன்றத்திற்குள் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்
No comments:
Post a Comment